December 29, 2018 தண்டோரா குழு
கோவையில் கனா திரையிடப்படும் திரையரங்குகளில் கனா படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.
கோவை 100 அடி சாலையில் உள்ள கற்பகம் காம்பிளக்ஸ் மற்றும் அர்சனா திரையரங்கத்தில் கனா படம் திரையிடப்பட்டவுடன் திடிரென திரைக்கு முன் கனா படத்தின் இயக்குனர் அருண் காமராஜ், கதாநாயகர் தர்ஷன், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தோன்றியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது. உடனே, படம் நிறுத்தப்பட்டு, கனா படக்குழுவினர் ரசிகர்களிடம் படத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டனர். மேலும், படம் குறித்து கேட்டறிந்தனர்.
கோவை மட்டுமின்றி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனா படக்குழுவினர் இதுபோன்று திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கின்றனர். முன்னதாக, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சார்பில் படக்குழுவினருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு வழங்கப்பட்டது.
பின்னர் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,
பொதுவாகவே மக்கள் நல்ல படங்களை எப்போதுமே நல்ல வரவேற்பு கொடுப்பார்கள். அதனால் தான் நாங்கள் உங்களை நேரில் சந்திக்கலாம் என்று வந்திருக்கிறோம். இதுமாதிரி எல்லா படங்களுக்கும் நாங்கள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். ஆசைப்பட்டால் மட்டும் போதாது அடம்பிடிக்கனும் என்ற வசனம் இந்த படத்தில் உள்ளது. அதைபோல் வாழ்க்கையில் எல்லாத்துக்கும் ஆசை மட்டும் படாதீங்க அடமும் பிடிங்க ஆனால் அந்த ஆசை நல்ல ஆசையாக இருக்கனும் கெட்ட ஆசையா இருந்த அதற்கு அடம் பிடிக்காதீங்க என்றார். மேலும், இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், வாய்ப்பு கேட்டு நடித்ததற்கான பலன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய இயக்குனர் அருண் காமராஜ்,
கனா படத்தை வெற்றி படமாக்கிய உங்கள் எல்லோருக்கும் நன்றி, உங்களுடைய கைதட்டு மற்றும் அன்பு மட்டும் தான் எங்களுக்கு மிகப்பெரிய பாராட்டு என்று அதை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இயக்குனராவது என்ற தனது கனவு 10 ஆண்டுகளுக்கு பிறகு கனா படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. மக்கள் அளித்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்ததால் தான் இந்த படம் சாத்தியமானது. மக்கள் அனைவரையும் விளையாட்டு என்பது எளிதாக சென்றடையும் என்பதால் கிரிகெட்டை மையமாக வைத்து கதை உருவாக்கினேன் என்று தெரிவித்தார்.