September 17, 2016 தண்டோரா குழு
காவிரி விவகாரத்தில் இருமாநில மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கன்னட நடிகர்கள் உபேந்திரா, புனித் ராஜ்குமார், தர்ஷன் ஆகியோர் மீது கோவை நீதிமன்றத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோவையை சேர்ந்த இளங்கோவன் என்பவர் கோவை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்து உள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா பகுதியில் கடந்த 9 ஆம் தேதி , விவசாயிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கன்னட நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கன்னட நடிகர்களான புனித் ராஜ்குமார், உபேந்திரா, தர்ஷன் ஆகியோர் இருமாநிலங்களிடையே பகைமையை வளர்க்கும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக கூறி. கோவையை சேர்ந்த இளங்கோவன் என்பவர் கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனுஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பொதுக்கூட்டத்தில் கன்னட நடிகள் பேசிய உரை போராட்டக்காரர்களை கலவரத்தில் ஈடுபட தூண்டியதாகவும், இதனால் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செயலில் ஈடுபட்ட நடிகர்களுக்கு தேசத்திற்கு எதிராக பேசியது, கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வருகிற அக்டோபர் 3ம்தேதி இந்தமனு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.