September 21, 2016 தண்டோரா குழு
இந்திய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
சட்டப்படிப்பு படித்ததாகப் போலி சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கில் டெல்லி மாநில சட்ட அமைச்சராக ஜிதேந்தர் தோமர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது பதவியை ராஜினாமா செய்தார். அதைபோல், உணவுத்துறை அமைச்சராக இருந்த ஆஷிம்கான் உணவுத்துறையில் கான்ட்ராக்ட் விட்டதில் சிலருடன் பேரம் பேசியதாக எழுந்த புகாரை அடுத்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேலும், டெல்லி அமைச்சரவையில் சமூக நலம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த சந்தீப்குமார் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளிவந்ததை அடுத்து அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கனார் கெஜ்ரிவால்.
இதைதொடர்ந்து, தற்போது டெல்லியின் ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமனத் உல்லாஹ் கான் மீது அவருடைய சகோதரரின் மனைவி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் ஜாமியா நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஞாயிறயன்று ஜாமியா நகர் காவல் நிலையத்திற்கு சரணடைய சென்றுள்ளார் அமனத் உல்லாஹ் கான். ஆனால் காவல்துறையினர் அவரைக் கைது செய்ய மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செயப்படுவதால் அக்கட்சி பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அடுத்தடுத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்ட போது மத்திய அரசை குற்றம் சுமத்திய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி எம்.எல்.ஏக்களை தவறான புகாரில் சிறைக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.