September 23, 2016 தண்டோரா குழு
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் மீது கல் வீசப்பட்டதினால் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வியாழனன்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து வெள்ளியன்று இந்த அமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில் கோவையில் காலை முதலே பெரும்பாலான இடங்களில் கடைகளை மூடினர்.மேலும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களால் வியபாரிகள் கடைகளை அடைத்தனர். காய்கறி சந்தைகளை திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. தனியார் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஓரு சில இடங்களில் அரசு பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது . துடியலூர், சின்னவேடம் பட்டி, கவுண்டர் மில்,பெரிய நாயக்கன்பாளையம்,தொண்டாமுத்தூர் ஆகிய இடங்களில் அரசு பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதில் பேருந்துகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
இதனையடுத்து கோவை கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும், கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் சேகரித்து வருவதாக காவல்துறை வட்டாராங்கள் தெரிவிக்கிறது.
காவல்துறையினர் முன்னிலையில் கல்வீச்சு
அசம்பாவிதங்களை தடுக்க முக்கிய இடங்களில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து நடைபெறும் கல்வீச்சு சம்பவங்கள் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடைபெறுகிறது. இதை தடுப்பதற்கான எந்த முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையிலேயே காவல்துறையினர் உள்ளனர்.
இதனிடையே கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள பள்ளி வாசல் ஒன்றின் மீது அதிகாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். இதுதொடர்பாக பள்ளி பெரிய கடைவீதி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.புரம் சண்முகம் சாலையில் உள்ள குர்ரத்துல் ஜன் ஹனபி சுன்னத் ஜமாத் மீதும் அதிகாலையில் குண்டு வீசியதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.மேலும், கோவை அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னனியினர்,இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கோட்டைமேடு பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். வழியில் உள்ள கடைகள் மீதும், ஆட்டோக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.இந்த கல்வீச்சு சம்பவத்தில் முதன்மை தலைமைக்காவலர் செந்தில்குமாரின் மண்டை உடைந்தது. இதன் எதிரொலியாக கோட்டைமேடு, ஆத்துப்பாலம் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் குவியலாக உள்ள பகுதியில் இஸ்லாமிய அமைப்பின் இளைஞர்கள் பெரும்பகுதி குவியலாக திரண்டு உள்ளனர்.
இதனால் கோவையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே அரசு மருத்துவமனையில் இருந்த சசிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடித்து மதியம் 12 மணியளவில் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து ஊர்வலமாக உடலை எடுத்து சென்றனர்.