March 1, 2016 Venki Satheesh
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் துவங்கியதை அடுத்து அனைத்து முக்கிய கட்சிகளும் போஸ்டர் யுத்தத்தை துவங்கியுள்ளன. கடந்த காலத்தில் ஒருமுறை காமராஜர் தோற்றபோது வெற்றிபெற்றவர் சார்பாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது.
அதில் படித்த வேட்பாளர் படிக்காத காமராஜரைத் தோற்கடித்தார் எனக் குறிப்பிட்டிருந்தனர். அதற்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரை வடிவமைத்த பெரியார் “படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த வேட்பாளர் வெற்றிபெற்றார் அதற்கு வாழ்த்துக்கள்” எனக் காமராஜரின் பெருமையையும் அதே சமயம் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தையும் கூறியிருந்தார். இது அந்த காலத்தில் பெருமையாகப் பேசப்பட்டது.
அதனால் இருவருக்குமே பெருமை சேர்ந்தது. ஆனால் தற்போது முக்கிய கட்சிகள் தங்களின் பெருமைகளைப் பேசாமல் அடுத்தவர்களைத் தரம் தாழ்த்தி விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனால் அனைத்துத் தரப்பினருக்குமே அவமானம் தான் மிஞ்சுகிறது.
முதலில் துவங்கிய தி.மு.க தற்போதைய முதல்வரை டீ.வி.ல பாத்திருப்ப நேர்ல பார்த்திருக்கியா என போஸ்டர் ஒட்டினர், பின்னர் அ.தி.மு.க எதிர்க்கட்சியைப் பற்றிக் குறைகூறி சமூக வலைதளங்களில் போஸ்டர் வெளியிட்டனர். இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இடையில் சிறிய மற்றும் புதிய கூட்டணிகள் தங்கள் நிலைப்பாட்டை பரப்ப அதே பாணியில் விளம்பரம் விளம்பரம் செய்துள்ளது அனைத்து நடுநிலை வாக்காளர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதில் படத்தின் பெயரிலும் அதில் வரும் பாடல் வரிகளைப் பயன்படுத்தியும் பல விளம்பரங்கள் வருவதால் ஒரு சிலர் ரசித்தாலும் பெரும்பாலானோர் வெறுக்கத் துவங்கியுள்ளனர். தாங்கள் வந்தால் என்ன நன்மை செய்வோம் என விளம்பரம் செய்யாமல் அடுத்தவர்களை அசிங்கப்படுத்தி ஆதாயம் தேடும் இது போன்ற விளம்பரங்கள் தேர்தல் நேரங்களில் அதிகளவு காணப்படும் என்பதால் இந்த முறை தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்படும் புகார்களின் அளவு மூன்று மடங்கிற்குமேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தல் கட்சியினரை விட அரசு அதிகாரிகளுக்கே அதிக சவாலான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.