September 26, 2016 தண்டோரா குழு
காஷ்மீர் மாநிலத்தில் அரசுப்படைகளின் அடக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினைதான் உரி தாக்குதல் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
நவாஸ் ஷெரிப், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பொது கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுவிட்டு அங்கு இருந்து நாடு திரும்பும் வழியில் லண்டன் விமான நிலையத்தில் சிறுது ஓய்வெடுத்தார்.
அங்கு, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக பாதுகாப்புப் படையினரின் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் மற்றும் பார்வையைப் பறிகொடுத்தவர்களின் உறவினர்கள் மிகவும் மனவேதனையுடனும், ஆவேசத்துடனும் இருக்கிறார்கள்.
அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று விசாரணையே இல்லாமல் இந்தியாவால் எவ்வாறு கூற முடியும்? எந்த ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி போடுதவதன் மூலம் இந்தியா பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது.
காஷ்மீரில் அண்மைக் காலமாக பாதுகாப்புப் படையினர் நிகழ்த்தி வரும் தாக்குதலில் சுமார் 108 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 150 பேர் பார்வையை இழந்ததையும் இந்த உலகமே அறியும்.
உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பழி போடுவதை விடுத்து, காஷ்மீரில் அப்பாவி மக்களின் நலனை எவ்வாறு சரிசெய்வது என்று இந்தியா ஆராய வேண்டும். காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணாத வரை அங்கு நிரந்தர அமைதியை எதிர்ப்பார்க்க முடியாது என்றார் நவாஸ்.