September 26, 2016 தண்டோரா குழு
மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவருமான சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரும்,அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவருமான சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்யும் இரண்டு பணி பெண்கள் கொடுத்த பாலியல் தொந்தரவு புகாரின் பேரில்
தூத்துக்குடி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் முறைகேடு செய்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையெடுத்து மதுரை கே.புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமைநீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வுக்கு வந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், சசிகலா புஷ்பாவைக் கைது செய்ய 6 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டனர். அதைபோல் சசிகலா மீதான புகார்கள் தொடர்பாக தூத்துக்குடி காவல்நிலையத்தில் அக்டோபர் 3ஆம் தேதியும், கே.புதூர் காவல்நிலையத்தில் அக்டோபர் 7ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு உத்தரவிட்டனர். மேலும், சசிகலா புஷ்பாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் தமிழகக் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.