September 29, 2016 தண்டோரா குழு
கர்நாடக அணைகளில் குடிப்பதற்கு மட்டும் தான் தண்ணீர் உள்ளதாகவும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடமுடியாது என ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மத்திய அரசு தலைமையிலான காவிரி நதிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பிரதிநிதிகளும், தமிழக அரசு சார்பில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஒரு போக சம்பா சாகுபடிக்காவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படியும்,தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும், அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா,
கர்நாடகவில் குடிநீர் பிரச்சனை நிலவுவதால், தமிழகத்துக்கு இதற்கு மேல் காவிரி தண்ணீர் திறந்து விட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.இதனால் மத்திய அரசு தலைமையிலான காவிரி நதிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை என மத்திய நீர்வள அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.