September 30, 2016 தண்டோரா குழு
மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனவும் நாளை முதல் 6ம் தேதி வரை, வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நான்கு வாரங்களில் காவிரி மேலாண்மை அமைக்க உத்தரவிட்டது. மேலும் இரு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கூட்டம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை நாளைக்குள் பரிந்துரை செய்ய வேண்டும். நாளை முதல் 6ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்திரவிட்டனர்.
மேலும் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறோம் சட்டத்தின் ஆளுமையை கர்நாடகா அரசு மதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.