October 1, 2016 தண்டோரா குழு
அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தின், ஆன்டர்சன் நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் மதியம், தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அங்கு இருந்து பள்ளிக்கு சென்று இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை துப்பாக்கியால் தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
14 வயது நிரம்பிய அந்த சிறுவன் அவனது தந்தையை வீட்டில் சுட்டுக்கொன்றுள்ளான். அவருடைய பெயர் ஜெப்ரி டெவிட் ஆஸ்பார்ன் (வயது 47). பின் அவனது தந்தையின் வாகனத்தை எடுத்துக்கொண்டு சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு ஓட்டிச்சென்றுள்ளான். அவன் ஒட்டி சென்ற காரை அந்தப் பள்ளிக்கூட விளையாட்டு மைதான வேலியின் மீது மோதி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் பள்ளிக்குள் சரமாரியாக சுட்டான்.
அதில் 2 மாணவர்களுக்கு கால்களில் குண்டு பாய்ந்துள்ளது மற்றும் ஒரு ஆசிரியருக்கு தோளில் குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்த அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக கரோலினா மாகனத்தின் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்களும் அங்கு விரைந்துள்ளனர்.
அவர்கள் அங்கு வருவதற்குள் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து விட்டனர். காவல் துறையினர் அங்கு வருவதற்குள், அந்த சிறுவன் அங்கு இருந்து தப்பிக்க கூடாதபடி தீயணைப்பு வீரர், ஜாமி பிராக் என்பவர் அவனை மடக்கி பிடித்துள்ளார். காவல் துறையினர் அங்கு வந்ததும் அவனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அச்சிறுவன் அழுதுக்கொண்டே அவனுடைய பாட்டியை தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ளான். அவன் என்ன செய்தான் என்று சொல்லாமலே தொடர்பை துண்டிதுள்ளான். அவர் அவனுடைய வீட்டிற்க்கு சென்று பார்த்த போது, அவனுடைய தந்தையின் உயிரற்ற உடலை பார்த்துள்ளார். ஆனால், அவர் அங்கு வருவதற்கு முன்பே அவன் அங்கு இருந்து சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், இந்த கோரசம்பவத்தை அடுத்து, அப்பள்ளியில் அந்த வாரத்திற்கான அனைத்து வகுப்புகளையும் ரத்து செய்து விட்டதாக அப்பள்ளியின் கண்காணிப்பாளர், ஜோன்னே ஏவரி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சிறுவனை சரியான நேரத்தில் மடக்கிப்பிடித்த தீயணைப்பு வீரர் ஜாமி பிராக்கிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.