October 1, 2016 தண்டோரா குழு
கர்நாடக அரசு சார்பில் இனி ஆஜராகப்போவதில்லை என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் கார்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வரும் பாலி எஸ். நாரிமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராகவும் பாலி எஸ்.நாரிமன் பணியாற்றி வருகிறார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இவர் கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.
காவிரி வழக்கில் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இருந்து கர்நாடகத்துக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால் நாரிமனை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இவரது வாதம் எடுபடவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ,முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோரை நேரில் சந்தித்து வழக்கில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தனது முடிவை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதுடன் கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளார். இது கர்நாடக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கர்நாடக முதலமைசரின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா கூறும் போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.