October 1, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வந்த ஆதார் அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது என மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், ஆதார் அட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த மத்திய அரசு 7 கோடியே 21 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 7 கோடியே 7 லட்சம் பேருக்கு பேருக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்து 6 கோடியே 48 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மீதமுள்ளவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் இன்று முதல் தமிழக அரசிடம் இந்த பணி ஒப்படைக்கப்படவுள்ளதாக மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
இனி தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் கீழ் செயல்படும் இ–சேவை மையங்கள் மூலமாக ஆதார் அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.