October 4, 2016 தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் பேரணியாக வந்து பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை, காவிரியில் இருந்து திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் பிறப்பித்து வரும் உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தாமல் தொடர்ந்து உத்தரவுகளை மீறி வந்தது.
இதனால், கோபமடைந்த நீதிபதிகள், கர்நாடக அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியதோடு, 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு, செப்டம்பர் 30ல் உத்தரவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெறும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, முதலில் சம்மதித்த மத்திய அரசு தற்போது பின்வாங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்திலிருந்து பேரணியாக சென்று பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
முன்னதாக பிரதமர் அலுவலகத்திற்குள் மனுவை தர 7 எம்.பி.,க்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி தர வேண்டும் எனவும், பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் அ.தி.மு.க., எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.