October 4, 2016 தண்டோரா குழு
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள யூரியில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குபதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையினர் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் பலியானதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் ரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர் கடாகின் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் உள்ள ராணுவ முகாம்கள், அப்பாவி பொதுமக்கள் ஆகியோரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்சூழலில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை ரஷ்யா வரவேற்கிறது. எந்தவொரு நாட்டுக்கும் தன் குடிமக்களை பாதுகாக்கும் உரிமை உண்டு. அதன்படியே, இந்தியாவின் ராணுவ நடவடிக்கையும் அமைந்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா துணை நிற்கும் என அவர் தெரிவித்தார்.