October 4, 2016 தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்றத்தால் தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதிற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்குவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பல கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமான போக்கு என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தமிழகத் தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தமிழக காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த உத்தரவின் மூலம் தேர்தலில் நேர்மையானவர்கள் போட்டியிட முடியும், ஜனநாயகத்தின் மாண்பை காக்கும் தீர்ப்பு. முன் உதாரணமான தீர்ப்பு, அரசு பணம் வீணாவதற்கு அரசே காரணம் என பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் தமிழக அரசாங்கம் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.