October 6, 2016 தண்டோரா குழு
இந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜிசாட் 18 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜிசாட் 18 செயற்கைகோளை நேற்று அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான கவுண்டன் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கயானாவில் நேற்று அதிக காற்றழுத்தம் காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவும் நிகழ்வு 24 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இன்று அதிகாலை 2 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிசாட் 18 செயற்கைகோள் தகவல் தொடர்புக்காக ரூ.1000 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. சுமார் 3,404 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்க 48 டிரன்ஸ்பாண்டர்களை கொண்டுள்ளது. இந்த செயற்கைகோள் தற்போது ஜியோசிங்ரோனிம்ஸ் சுற்று வட்ட பாதையில் நிலை கொண்டு சேவை புரிய உள்ளது.
ஜிசாட் 18 செயற்கைகோள் தனது சுற்றுவட்ட பாதையை அடைந்தது முதல் தனது சேவையை துவங்குகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை தனது சேவையை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.