October 7, 2016 தண்டோரா குழு
கவுரவக் கொலைகளுக்கு எதிரான சட்டம் ஒன்று பாகிஸ்தானில் ஏற்படுத்தப்படும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. அச்சட்டம் நேற்று அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
குடும்ப மரியாதை என்ற பெயரில் கொலை செய்தவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தித் தப்பாமல் இருக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சொந்த சகோதரனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கடும் வெறுப்பைத் தூண்டியது.
அவ்வாறு கொலை செய்தவர்களை இறந்தவரின் குடும்பத்தினர் மன்னித்தாலும் அவருக்கு ஆயுள் தண்டனை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் என்று அந்த மசோதா தேசிய சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சில கற்பழிப்பு குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரித்ததோடு, டிஎன்ஏ பரிசோதனையைக் கட்டாயப்படுத்தியது. மேலும் இளம் வயதுடையவர், மற்றும் ஊனமுற்றோர்கள் கற்பழிக்கப்பட்டால் அக்குற்றத்தைச் செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் பெண்கள் பல ஆண்டுகளாகத் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். அங்கு நடக்கும் கௌரவ கொலையில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பெண்களின் உயிர்கள் பறிக்கப்படுகிறது. ஒரு குற்றத்தை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. அங்கு கற்பழிப்புக்கான தண்டனை மிகவும் குறைவு. சூழ்நிலை ஆதாரங்களை அந்நாட்டின் சட்டம் நம்பியிருக்கிறதாலும் தடயவியல் சோதனைப் பற்றாக்குறையே இதற்குக் காரணம்.
மனித உரிமை குழுக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாகவே அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறையை சமாளிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் பாகிஸ்தானை சேர்ந்த கோன்டேல் பலோச் தன் முதல் கணவரின் கொடுமையால் அவரை விட்டு பிரிந்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இது அவருடைய குடும்பத்தினருக்கு பிடிக்காததால், அவருடைய சகோதரன் அவரை கொடூரமான முறையில் கொலை செய்தார். இச்சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.
நேற்று அமலுக்கு கொண்டு வந்த இந்த மசோதா தேசிய சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது. அதில் கெளரவம் என்ற பெயரில் கொலை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் அவர்களுடைய குற்றத்தை கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் மன்னித்திருந்தாலும் அக்குற்றவாளிக்கு தண்டனையை நீதிபதிகள் வழங்குவது அவசியம் என்று மூத்த எதிர்ப்பு சட்டவல்லுனர், பர்ஹத்துல்லாஹ் பாபர் தெரிவித்தார்.