October 7, 2016 தண்டோரா குழு
இந்தியாவின் பாரம்பரிய திருமண கலாச்சார ஆடை,ஆபரணங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக நாடுகளின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலும் கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழகத்தில் கண்காட்சி நடைப்பெற்றது.
கோவை வடகோவை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவினாசிலிங்கம் பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. மகளிர்க்கு மட்டும் செயல்பட கூடிய இப்பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பல்கலைக்கழகத்தின் ஜவுளி மற்றும் ஆடை துறையின் மாணவிகள் நடத்திய கண்காட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்களின் திருமண நிகழ்ச்சியில் அவர்கள் அணியக்கூடிய ஆடைகள், ஆபரணங்கள் போன்றவை பார்வைக்காக வைக்கப்பட்டன. மாணவிகளும் பாரம்பரிய உடைகள் , ஆபரணங்கள் ஆகியவை அணிந்து திருமண கோலத்தில் பார்வையாளர்களை வரவேற்றனர்.
இது குறித்து ஜவுளி மற்றும் ஆடை துறையின் முதன்மை ஆசிரியர் அம்சமணி கூறுகையில்,
இந்தியாவில் தற்போது மேற்கத்திய கலாச்சராம் பரவலாக பரவி வருகிறது.இதனால் இந்தியர்களின் பல்வேறு பாரம்பரியங்கள் அழிந்துக்கொண்டு வருகிறது. இது குறித்து மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இக்கண்காட்சியை நடத்தினோம். மேலும், ஜவுளி துறையில் பாரம்பரிய ஆடைகள் வடிவமைப்பது குறித்து மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாக இக்கண்காட்சி இருக்கும் என அவர் தெரிவித்தார்.
மாணவிகளை கண்காட்சிகள் இடம் பெற்றுள்ள அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய ஆடை, ஆபரணங்கள் அணிந்து வரவழைத்து கண்காட்சியை நடத்தினோம் இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதுமட்டுமின்றி மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது என அத்துறையின் ஆசிரியர் பாக்கியலட்சுமி கூறினார்.
அதேபோல் உள்துறை வடிவமைப்பு துறை சார்பாக உலக நாடுகளின் பாரம்பரியத்தை அறியும் வகையில் கொலு பொம்மைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில் பல நாடுகளின் பண்டைய கால மனிதர்கள், பாரம்பரிய சின்னங்கள் ஆகியவை உருவ வடிவமைப்பில் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் பல அரிய வகை மலர்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து உள்துறை வடிவமைப்பு துறை மூன்றாம் ஆண்டு மாணவி அஸ்விதா கூறுகையில்.
இக்கண்காட்சியின் மூலம் இந்திய பாரம்பரிய ஆடை வகைகள், உலக நாடுகளின் பாரம்பரியம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் கண்காட்சிக்கான ஏற்பாட்டை 2 நாட்களாக ஆசிரியர்களும் மாணவிகளும் செய்தோம். தற்போது கண்காட்சி மூலம் பல மாணவிகள் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள் என தெரிவித்தார்.