October 8, 2016 தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து வரும் 15ம் தேதி தமிழகக் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
காவேரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதனிடையே காவேரி விவகாரம் தொடர்பாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்புத் தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனைக் கண்டித்துத் தமிழகத்தில் பல கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தஞ்சாவூரில் ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் வரும் 15ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக உண்ணாவிரத போராட்டம் திருச்சியில் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த அறப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.ஆர்.ராமசாமி, ப.சிதம்பரம், ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக கூறினார்.
மேலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு துரோகம் செய்வதாகவும் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.