October 11, 2016 தண்டோரா குழு
கோவை சுங்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அரசு பேருந்துக்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவர் நேற்று(10-10-16) அன்று மாலை சேரன்மாநகர் பகுதியில் இருந்து காந்திபுரம் வரை செல்லக்கூடிய அரசு பேருந்தை ஒட்டி வந்தார்.
சேரன்மாநகர் பகுதியில் வளைவு ஒன்றில் முன்னாடி சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது லேசாக பேருந்து ஓரசியது. இதனால் கோபம் அடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த திருமலைநம்பி என்பவருக்கும் பேருந்து ஓட்டுனர் செல்வகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் தாக்கி கொண்டனர் என காவல்துறை தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.
இதில் காயம் அடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயம் சக ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு தெரியவரவே அவர்கள் இன்று அதிகாலை பேருந்துகளை இயக்காமல் சுங்கம் பணிமனையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் ஓட்டுனரை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பணிமனை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை சமாதானம் செய்து ஓட்டுனரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது, பேருந்துகள் இயக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.