October 12, 2016 தண்டோரா குழு
தமிழக முதல்வர் ஜெயலிதா உடல்நலகுறைவால் கடந்த 22ம் தேதியில் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வரும் வரை, அவர் கவனித்து வந்த இலாக்காக்கள், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
கவர்னரின் இந்த அறிவிப்பிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
கவர்னரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். கவர்னரின் இந்த அறிவிப்பு, முதல்வரின் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங் தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில் அரசு பணிகள் தொய்வின்றி நடக்க கவர்னர் எடுத்துள்ள இந்த முடிவு பாராட்டுக்குரியது.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்வாக வசதிக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும், அரசியல் அழுத்தம் இதற்கு காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஆளுநரின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.