October 12, 2016 தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உயர் மட்ட அமைதி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், என மக்கள் சிவில் உரிமை கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் கடந்த 22 ஆம் தேதி இந்து முன்னனி பிரமுகர் சசிக்குமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார், இதையடுத்து அவரது உடல் 23 ம் தேதி கோவை துடியலூர் பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தின் போது கோவையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவம் நடந்தது.
இந்த வன்முறை தொடர்பாக மக்கள் சிவில் உரிமை கழகத்தில் உண்மை கண்டறியும் குழு ஒன்று தொடங்கப்பட்டது. இக்குழு கோவையில் வன்முறை நடந்த இடங்களை ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு மாநில செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் அதன் மாநில செயலாளர் முரளி பேசுகையில்…
இக்குழு வன்முறையில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டது. இந்து முன்னனி செய்தி தொடர்பாளர் சசி குமார் கொல்லப்பட்டு உடல் அரசு மருத்துவமனையில் வைத்திருக்கும் போது மருத்துவமனை வளாகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு வந்தது எப்படி அவர்களை காவல் துறையினர் ஏன் அனுமதித்தனர். சசிகுமார் உடல் 12 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக எடுத்து செல்ல காவல் துறையினர் எதற்காக அனுமதித்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்கள் கடைகள் அடித்த நொறுக்கப்பட்டதை அருகில் இருந்த காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததாக மக்கள் குற்றம் சாட்டினார். அவர்களை தடுத்து நிறுத்த தவறிய காவல் துறையினர் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.
வன்முறையின் போது இளைஞர்கள் தூண்டி விடப்பட்டிருக்கிறார்கள்.அவர்களை தூண்டி விட்டவர்கள் மீது விசாரணை தேவை . கோவை வன்முறையின் போது இஸ்லாமியர்கள் அமைதியாக இருந்ததன் விளைவாக கோவையில் மீண்டும் அமைதி திரும்பியது.
மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க குழு அமைத்து மக்களிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மேலும் வன்முறையில் பத்து கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது, பல கடைகள், மீது திட்டமிட்டு பொருட்கள் சூறையாடப்பட்டது. இந்த சேதத்திற்கெல்லாம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.