October 12, 2016 தண்டோரா குழு
பள்ளி மாணவரை சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தி பேசிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவனின் தாயார் பழனியம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மலையாண்டி பட்டினத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அப்பகுதியில் உள்ள ஏ.நாகூர் அரசு மத்திய மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி ஆனந்த் வீட்டு பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஓவிய ஆசிரியர் செல்வராஜ் ,பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த கிருஷ்ணன் ஆகிய இருவரும் சக மாணவர்கள் முன்னிலையில் ஆனந்தை சாதி பெயர் சொல்லி இழிவாக பேசியும், உங்கள் சாதிகாரங்க படிப்பதற்க்கு ஆக மாட்டாங்க, ஆடு மேய்க்க தான் லாயக்கி என பேசி கன்னத்தில் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆனந்தின் பெற்றோர் பள்ளிக்கு சென்று கேட்ட போது இது உயர் சாதி மாணவர்கள் படிக்கும் பள்ளி இங்கு இப்படி தான் பேசுவார்கள் என கூறியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் பொள்ளாச்சி கோமங்கலம் காவல் நிலையத்தில் 5.10.16 அன்று புகார் அளித்துள்ளார். ஆனந்தின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் வழக்கு பதிவு செய்து நீண்ட நாள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பழனியம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.