October 12, 2016 தண்டோரா குழு
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கோவை உக்கடம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த பத்தாம் தேதி ஆயுத பூஜை கொண்டாடிய புகை படத்தை முகநூலில் வெளியிட்டார். அதில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் சில ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் கோவை மாவட்ட அனைத்து ஜாமத், இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில் ஏ.ஆர் காவலர்கள் பயன்படுத்தும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கி மற்றும் ஏர்கன் துப்பாக்கிகள் தனி நபரிடம் எப்படி வந்தது. இந்த துப்பாக்கிகள் ஆயுத தடை சட்டத்தில் உள்ள ஆயுதங்கள், மக்களை அச்சுறுத்தும் வகையிலான துப்பாக்கியை வைத்துள்ளதால் ஆயுத தடை சட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில்,எனது மகன் ரைப்பில் கிளப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறான். அவன் பயன்படுத்தும் ஆபத்தில்லாத டம்மி துப்பாக்கிகள் தான் ஆயுத பூஜை அன்று வைக்கப்பட்டது என்றும் என் மீது திட்டமிட்டு பழி சுமத்துகின்றனர் என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.