October 12, 2016 தண்டோரா குழு
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலகுறைவால் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்று மருத்துவமனை அறிவுறுத்தியதால் அவர் கவனித்து வந்து அனைத்து இலாகாக்களும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என நேற்று ஆளுநர் அறிவித்தார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ந் தேதி இரவு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து நேற்று முன்தினம் கலைஞர் , முதல்அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று தன்னுடைய பணியினை தொடர்கின்ற வரையில் தமிழக மக்களுக்கு உள்ள அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட உரிய ஏற்பாடுகள் முறைப்படி, சட்டப்படி எடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் நாட்டு மக்களின் வேண்டுகோள் என அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், கலைஞரின் வேண்டுகோளுக்கிணங்க உரிய மதிப்பளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் இரண்டாம் நிலையில் உள்ள நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வதற்கு முதல் அமைச்சர் வகித்து வந்த பொறுப்புகளை வழங்கியும், அமைச்சரவைக்கு தலைமை ஏற்கும் அதிகாரமும் அளித்தும் தமிழக ஆளுநர் சரியான முறையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தமிழக மக்களிடம் நிலவி வந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு கண்டுள்ளதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது என அறிக்கையில் குறிபிட்டுள்ளார். மேலும், பன்னீர் செல்வம் முதல்அமைச்சரின் இலாகாக்களை ஏற்றுள்ளதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது எனக் கூறியுள்ள அவர் தமிழக முதல்வர் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் மக்கள் பணி தொடர எல்லோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.