October 13, 2016 தண்டோரா குழு
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, தமிழ் புத்தாண்டு, மற்றும் தொடர் விடுமுறைக்காலங்களில் ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. மேலும்,வரும் அக்டோபர் 29 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவு மக்கள் வெளியூர் செல்வார்கள். இந்த சூழலை பயன்படுத்தி சில தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருகிறது. மேற்கண்ட தொலைபேசி எண் மூலம், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யும் போது அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம். மேலும், மேற்படி புகார் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பப்படும். அனைத்து பொதுமக்களும் தங்களது புகார் மீதான உரிய நடவடிக்கைக்கு மேற்குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.