October 14, 2016 தண்டோரா குழு
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் ‘மென்பொருள் குறைகளை கண்டறியும் திட்டத்தின்’ கீழ், அதிக அளவில் பரிசு பணத்தை பெறுவதில், இந்த ஆண்டு இந்திய ‘ஹேக்கர்கள்’ தான் முதலிடத்தில் உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படுவது பேஸ்புக் ஆகும். புதிய நண்பர்களை இணைத்தல், சாட்டிங், புகைப் படங்ககள், வீடியோக்கள் சேர் செய்துவது என பல அம்சங்கள் பேஸ்புக்கில் உள்ளது.
இதுமட்டுமின்றி, பயனாளர்களின் பாதுகாப்புக்காக பேஸ்புக் நிறுவனம் தனது செயலியின் பாதுகாப்பில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிந்து களைவதற்காக, 2011-ஆம் ஆண்டு குறைகளை கண்டறியும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பேஸ்புக்கில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டும் அதனை கண்டறிபவர்களுக்கு பண பரிசுகளும் வழங்கபட்டன.
பேஸ்புக் தவிர அதன் கிளை நிறுவனங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சாப்புக்கும் இந்த சேவைகள் விரிவு செய்யப்பட்டது. இதில் இந்த வருடத்தில் பேஸ்புக்கில் அதிக குறைகளை கண்டறிந்து பரிசுகளை பெற்றதில் இந்தியர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேஸ்புக்கில் உள்ள செயல்பாட்டு குறைபாடுகள் தொடர்பாக இந்த வருடம் இதுவரை 9000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளில் பங்கெடுத்த 149 பேருக்கு இதுவரை, ரூ.4 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.இதில்,அதிக அளவில் பரிசுப்பணம் பெற்று இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும்,இரண்டாமிடத்தில் அமெரிக்காவும், மூன்றாமிடத்தில் மெக்சிகோவும் உள்ளன.