October 18, 2016
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் தர தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பழங்குடியினருக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க இயலாது என்று கூறியுள்ளார். மேலும், இந்த உத்தரவு 4 வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அதற்குள் தமிழக அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார்.