October 20, 2016
தண்டோரா குழு
கோவை மாங்கரை வனச்சரகப் பகுதியில் 30 வயதான பெண் யானை புதன்கிழமை மயங்கிய நிலையில் காணப்பட்டது. அதைக் கண்ட பிறகு, அதற்குச் சிகிச்சை அளிக்க முயன்ற போது, யானைகள் கூட்டம் வந்ததால், கைவிடப்பட்டு, இரண்டாம் நாளான வியாழக்கிழமை சிகிச்சை தொடர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான கோவை மாங்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரிய தடாகம் கரியாங்குட்டை அருகே அந்த யானை மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தது. அதைக் கண்ட சிலர், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து,வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையில், ஆனைகட்டி கால்நடைத்துறை மருத்துவர் ஜெயந்தி மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதற்கு முப்பது வயது இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் மருத்துவர் குழு ஈடுபட்டது. சிகிச்சை தர வசதியாக போக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், அந்த யானையைத் தூக்கி நிறுத்த முயன்றனர். அப்படியும் அதனால் எழுந்திருக்க இயலவில்லை.தொடர்ந்து, சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டு யானையை தூக்க முயற்சி மேற்கொண்டனர்.
அந்த யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகில், 4 யானைகள் திடீரென்று அங்கு வந்தன. அதனால், பீதியடைந்த அங்கிருந்த மக்கள் அலறியபடி ஓடினர். காட்டு யானைகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை வெடித்தனர். ஆனாலும், அவை அங்கேயே நின்றிருந்தன. மேலும், இரவு ஆகிவிட்டதால், வனத்துறையினரும், மருத்துவர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
இதனையடுத்து இன்று (வியாழன்) காலையில் மீண்டும் சிகிச்சை தொடங்கியது.தற்போது யானை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் விரைவில் குணமடைந்து காட்டிற்கு திரும்பும் என வனத்துறை மருத்துவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.