October 20, 2016 தண்டோரா குழு
கோவையில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நுகர்வோர் வாணிபக் கழகம் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் மொத்தம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பணியாளர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும் என 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.அதே போல் குறைந்தபட்ச கூலி சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், இதுவரை அவர்களுக்கு பஞ்சப்படியும் குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்கப்படவில்லை.
அதே போல் கிடங்குகளுக்கு அனுப்பும் பொருட்களின் அளவுகளில் அதிகாரிகள் முறைகேடு செய்வதாகப் புகார் வந்துள்ளது. கோவை மாவட்டம் பூசாரிபாளையத்தில் உள்ள நான்கு யூனிட்டுகளுக்கும் சரியான அளவில் பொருட்கள் செல்வதில்லை எனவும் கூறப்படுகிறது.இதனால் சுமை தூக்கும் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக கோவை மாவட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இங்கு பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் மாதம் 100 ரூபாய் மட்டும் பஞ்சப்படி வழங்கப்படுகிறது. 30 ஆண்டுகளாக பணியாற்றிவருபர்களுக்கும் மாத ஊதியமும் 1500 ரூபாய் அளவே ஊதியம் வாங்கி வரும் அவலம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அரசு அறிவித்த பஞ்சப்படியும், ஊதியமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பூசாரிபாளையம் பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழகத்தில் உள்ள சுமை தூக்கும் பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தை நடத்துகின்றனர். அரசு இதே மெத்தனப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை நாள் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு முறையாக பொருட்கள் அனுப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவில்லை என்று புகார் கூறப்படுகிறது.