October 20, 2016 தண்டோரா குழு
சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க கோவையில் அதிநவீன தொழில்நுட்ப காவல் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறை துணை ஆணையாளர்( போக்குவரத்து )
எஸ்.சரவணன் தெரிவித்தார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கனக்ட் கோயம்புத்தூர் என்ற கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாவட்ட போக்குவரத்து காவல்துறை துணை ஆணையாளர் எஸ்.சரவணன் சைபர் கிரைம் குற்றங்களை எவ்வாறு தடுக்க முடியும் என்பது குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் இணையதள திருடர்கள் நமது தகவல்களை எளிதல் அறிந்து கொள்ள அது வழி வகுக்கும். அதனைக் கொண்டு வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றமுடியும்.
மேலும் “ஸ்மார்ட் போன்” இன்று அனைவரிடத்திலும் உள்ளது. அதிலேயே அனைத்துப் பணிகளும் மேற்கொள்ள முடியும். அவ்வாறு நாம் மேற்கொள்ளும் போது கவனமாக செயல்பட வேண்டும். ரகசியக் குறியீட்டு எண் (பின் நம்பர்) போன்றவற்றை மாற்றிக்கொண்டே இருக்கே வேண்டும். போன்களில் எந்த ஒரு கடவுச்சொல்லும் சேமிப்பில் வைக்ககூடாது. ஒரு வேளை இணையதள திருடர்கள் ஊடுருவ முயன்றால் அவர்களுக்கு நம் கடவுச்சொற்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இணையதள குற்றங்கள் குறித்து தடுக்க,விசாரிக்க மாவட்ட வாரியாக சைபர் கிரைம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் அதி நவீன தொழில் நுட்பத்தில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இணையதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். காவல் துறை சார்பில் கூறப்படும் அறிவுரைகளை ஏற்று மக்கள் செயல்பட்டாலே, மேற்பட்ட குற்றங்களைப் பெருமளவு தடுக்க முடியும்.
மேலும் வெளிநாட்டு திருடர்கள் தான் இணையதள குற்றங்களில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். தொழில் அதிபர்கள், பொதுமக்களுக்கு வரும் மின்னஞ்சலில் சந்தேகம் இருப்பின் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கேட்க வேண்டும்.இவ்வாறு சரவணன் பேசினார்.