October 22, 2016 தண்டோரா குழு
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்படுவோரைப் பாதுகாப்பாக தங்க வைக்க 466 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர்
பி.சங்கர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரிரு வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்டத்தில் மழையினால் ஏற்படும் சேதங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மழைக் காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அஞ்சப்படும் 101 இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்த 520 இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவர்.அவர்களை வழி நடத்திச் செல்ல 6 மீட்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பேரிடர் சேதங்கள் குறித்து உடனடியாக பொதுமக்கள் தெரிவிக்க 1077 என்ற இலவச எண் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் மழையினால் ஏற்படும் மண் சரிவு, நிலச்சரிவுகளை உடனுக்குடன் அகற்ற ஜேசிபி இயந்திரங்களும் 5 ஆயிரம் மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க மரம் அறுக்கும் கருவிகளைத் தயார் நிலையில் வைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.