October 22, 2016 தண்டோரா குழு
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 252 ராணுவ வீரர்களின் உறுதிப் பிரமாண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 42 வார காலம் பல்வேறு போர்ப் பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பயிற்சி முடிந்த ராணுவ வீரர்களின் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் பைபிள், குரான், பகவத் கீதை உள்ளிட்ட புனித நூல்கள் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்த ராணுவ வீரர்கள் ஜம்மு, காஷ்மீர், சியாசின், கார்கில் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எல்லைப் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா, ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் எஸ்.கே. சாங்குவான் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதில், சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்குப் பதக்கங்களும், பாராட்டும் வழங்கப்பட்டன.
இதில், ராணுவ வீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.