October 24, 2016 தண்டோரா குழு
காங்கிரஸ் கட்சிக்காகக் கடுமையாக உழைத்து வரும் ராகுல் காந்தி, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு காலம் கனிந்துவிட்டது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தில்லிக்குச் சென்றுள்ள நாராயணசாமி அங்கு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியதாவது:
நாடு முழுவதும் மாநில அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக உழைத்து வருகிறார். அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் உ.பி., மாநிலம் முழுவதும் அண்மையில் சுற்றுப்பயணம் செய்து, கட்சியை வளர்க்க பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல்காந்தி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்குக் காலம் கனிந்துள்ளது. இதுவே, அதற்கான சரியான சமயம். புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன், எனக்கு கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது. துணைநிலை ஆளுநர் மற்றும் அமைச்சரவையின் உரிமைகள் என்னவென்று, அரசியல் சாசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பகுதியில் அதிரடித் தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) தாக்குதல் நடத்தப்படுவது, முதல் முறையன்று. ஏற்கனவே, காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக், கூட்டணி ஆட்சியிலும் இத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளன. ராணுவ நடவடிக்கையை, அரசியலாக்கும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளார் என நாராயணசாமி கூறினார்.