October 24, 2016 தண்டோரா குழு
தீபாவளி பண்டிகை வந்தால் போதும் புத்தாடைகளை வாங்க மக்கள் கடைவீதிக்குச் சென்று விடுவார்கள். ஒவ்வொரு தீபாவளிக்கும் இளைஞர்கள் விதவிதமாக, புதிது புதிதாகத்தான் ஆடைகளைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். ஆடைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் அதற்கு ஏற்ப புதுப்புது வடிவில் ஆடைகளை வடிவமைத்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் காலத்து ஜீன்ஸுக்கும் இந்தக் காலத்து ஜீன்ஸுக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்துவட்டன. ஆம், கொஞ்சம் “ட்ரெண்டியான ஜீன்ஸ்” பேண்ட் போட்டாலே, “என்னய்யா, கிழிஞ்ச பேண்ட்டை போட்ருக்கே… ?” என்று நமது மக்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு ஏற்ப இந்த தீபாவளிக்குப் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஒரு “டீ ஷர்ட்” அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கடைக்கு வந்தவுடன் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. அணிந்திருப்பதையே உணர முடியாத வகையில் வெகு இலகுவாகவும் மிகவும் காற்றோட்டமாகவும் உள்ளதாம்!
பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி அங்காடி வளாகத்தில் மிகவும் கிழிந்த நிலையில் உள்ள ஒரு “டீ ஷர்ட்டை” விற்பனைக்கு வைத்துள்ளனர். பல ஓட்டைகளுடன் இருக்கும் இந்த டீ ஷர்ட்டின் விலை ரூ.1,799 மட்டும்தான். கேட்டால், “இதுதான் ட்ரெண்ட்” என்கிறார்கள். தற்போது இந்த டீ ஷர்ட், சில நெட்டிஸன்களின் கைகளில் சிக்கியுள்ளது. அதை வைத்து மீம்ஸ் மழைகளைப் பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
“அடப்பாவிகளா! முந்தி இப்படி டிரஸ் போட்டா பிச்சைக்காரன்னு சொல்வீங்க! இப்போ இதையே ட்ரெண்ட்னு சொல்றீங்க! என்னங்கடா ஆச்சு உங்களுக்கு?” என்று நடிகர் விவேக் தனது “ட்விட்டர்” பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.