October 25, 2016 தண்டோரா குழு
பி.எஸ்.ஜி மாணவர்கள் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக 70 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி கல்வி குழுமம் மாணவர் இல்லம் நடத்தி வருகிறது. இதில் தற்போது 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
இவர்களில் 60 க்கும் மேற்பட்டோர் பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளியில் படித்து வருகின்றனர் மற்றவர்கள் பி.எஸ்.ஜி. கல்விக் குழுமத்தில் கல்லூரி படிப்பைப் படித்து வருகின்றனர். மாணவர்கள் இங்கு கட்டணமின்றி கல்வி கற்கிறார்கள்.
தீபாவளித் திருநாளை இவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட பி எஸ் ஜி குழுமத்தின் சக மாணவர்கள் உதவி புரிகின்றனர். அவர்களுக்கான உடைகள், இனிப்புகள், பட்டாசுகள் ஆகியவற்றை வாங்குவதற்கு சக மாணவர்கள் நிதி வழங்குகிறார்கள். அந்த நிதியுடன் பி.எஸ்.ஜி நிர்வாகமும் நிதி வழங்கி உதவி புரிகிறது.
செவ்வாய்க்கிழமை (அக். 25) ஆதரவற்ற மாணவர்களுடன் சக மாணவர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் இணைந்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டும், பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
“தீபாவளி கொண்டாட்டத்தை அனைவருடன் கொண்டாடுவதில் மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது. அனைவரும் அன்புடன் பழகுவதால் எங்களுக்கு யாரும் இல்லை என்ற எண்ணமே வருவதில்லை” என்று மகிழ்ச்சி பொங்க அவர்கள் கூறினர்.தீபாவளிப் பண்டிகையை அர்த்தத்துடன் கொண்டாடிய மாணவர்களை எண்ணி அவர்கள் பெருமிதம் கொண்டனர்.