October 26, 2016 தண்டோரா குழு
ஒருவர் இரு முறை பிறக்க முடியமா…?அந்தக் காலத்தில் டாக்டர் ரங்காச்சாரி வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சம்பவம் கூறப்படுவதுண்டு.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணை, மாடு கொம்பினால் குத்தியதாகவும், அதில் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் கருப்பை கிழிந்து, கருவின் கை வெளியே தொங்கிக் கொண்டிருந்தது என்றும் சொல்வார்கள். அப்போது டாக்டர் ரங்கச்சாரி, அக்குழந்தையின் கை அருகே தீக்குச்சியைப் பற்ற வைத்துக் காட்டினாராம். வெப்பத்தினால், குழந்தை உள்ளே இழுத்துக் கொண்டதாம். உடனே கருப்பையைப் பாதுகாப்பாகத் தைத்து அப்பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றினார் என்று சொல்வார்கள். இது உண்மையாக நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், டெக்சஸ் மருத்துவமனையில் கருவிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தை சிகிச்சை தரப்பட்டு, மீண்டும் உள்ளே வைக்கப்பட்டு, உரிய நேரத்தில் பிரசவம் நடந்திருக்கிறது.
டெக்சஸில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மார்க்கரெட் போமெர் என்ற கருவுற்ற பெண் மருத்துவப் பரிசோதனைக்காக வந்திருந்தார்.அவருக்குக் குழந்தை பிறக்க 12 வாரங்கள் இருந்த நிலையில், வழக்கமான அல்ட்ரா சவுண்ட் சோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டன. அப்போது அவரது அல்ட்ரா சவுண்ட் முடிவுகளைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம், அவர் கருவுற்ற குழந்தை உடலின் பின் பகுதியில் “சேக்ரோஆக்ஸிஜியல் டெரடோமா என்ற ஒரு வித ஆபத்தான கட்டி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் அதைப் பற்றி விவாதித்தபோது, அந்தக் கட்டி கருப்பையின் உள்ளே இருந்தாலும் வேகமாக வளரும் என்று கண்டறிந்தனர்.
ஒரு மருத்துவர் அந்தக் கருவைக் கலைத்துவிடலாம் என்று யோசனை கூறினார். அதை மற்றவர்கள் ஏற்கவில்லை. இந்தக் கட்டி பிறப்பதற்கு முன்பே உடலில் ஏற்படும் என்றும், 35 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படுவதுண்டு என்றும் டெக்சஸ் குழந்தை நல மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டாரெல் காஸ் தெரிவித்தார்.
மேலும், அந்தக் கட்டியை ஆபரேஷன் மூலம் அகற்றிவிடலாம் என்று கூறிய டாக்டர் டாரெல் காஸ், “ஏழு ஆண்டுகளுக்கு முன் அப்படி ஆபரேஷன் செய்து கட்டியை நீக்கியிருக்கிறேன்” என்றார்.அந்தக் கரு உருவானதிலிருந்தே வளர்ந்து வந்த அந்தக் கட்டி 23 வாரத்தில் குழந்தையின் அளவுக்கு வளர்ந்துவிட்டது என்பதை மருத்துவர்கள் கண்டு கவலைப்பட்டனர்.
இறுதியில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டு, கருவிலிருந்து அந்தக் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்து, கட்டியை அகற்றினர். பின்னர், அக்குழந்தையை தாயின் கருப்பையில் பத்திரமாக வைத்து மூடினர்.
பின்னர், 12 வாரம் பாமெர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் அதே மருத்துவமனையில் இருந்தார். நல்ல காலமாக கருவுக்கு எந்தப் பாதிப்பு இல்லை. அது வழக்கம் போல வளர்ந்தது.9 மாதம் பூர்த்தியான பிறகு சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தபோது, 2.4 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்தது. இருந்தாலும் பின் பகுதியில் சிறிது ஒட்டிக் கொண்டிருந்த கட்டியையும் மருத்துவர்கள் அகற்றிவிட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, தாயும் மகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். “இந்த ஆபரேஷனுக்கு நான் இசையாவிட்டால், என்ன ஆகியிருக்குமோ.. “ என்றார் தாய் பாமெர்.ஆக, தாயின் கருவிலிருந்து இரு முறை இந்தப் பூமியில் பிறந்திருக்கிறது லைன்லீ என்ற பெண்குழந்தை.