October 27, 2016 தண்டோரா குழு
மத்திய இத்தாலியில் புதன்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மார்ச்சே மற்றும் அம்ப்ரியா பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது. அதை தொடர்ந்து 5.9 ரிக்டர் அளவுகோல் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
காஸ்டேல்சண்டங்கேலோ சுள் நேரா, விச்சோ மட்டும் உச்சிடா ஆகிய நகரங்கள் அருகில் உள்ள மசேரடா மாகாணத்தை மையபுள்ளியாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள வேநேடோ என்னும் இடம்வரை உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் மத்திய இத்தாலியில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக உஸ்சிதா நகரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் உயிர்ச் சேதம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தை அடுத்து, மின்சாரம் தடைப்பட்டது. சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.
காஸ்டேல்சண்டங்கேலோ சுள் நேரா நகரில் மின்சாரம் இல்லாத காரணத்தால் பொதுவாக மக்கள் கொண்டாட்டங்களுக்கு கூடும் இடத்திற்கு சுமார் 300 பேர் வந்து சேர்ந்தனர் என்று அந்நகர தலைவர் மாரோ பாலுசி கூறினார்.
உஸ்சிதா நகரில் தேவாலயம் மற்றும் பல்வேறு கட்டடங்கள் கடுமையாக சேதம் அடைந்திருப்பதாகவும், கணக்கெடுப்பு முடிந்த பிறகே சேதமடைந்த கட்டடங்களின் முழு விவரம் தெரியவரும் என்றும் அந்த நகரத்தின் மேயர் கூறினார்.
மேலும், இந்த இயற்கை அழிவினால் பாதிக்கப்பட்ட இடங்களின் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களைக் கண்காணிக்கும் பொருட்டு இத்தாலி நாட்டின் பிரதமர் மாட்டியோ ரென்சி தன்னுடைய தனிப்பட்ட வேலைகளை ஒத்திவைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது ஒரு மலைப்பகுதி கிராமம் முற்றிலும் அழிந்தது. அதனைச் சுற்றியுள்ள நகரங்களும் கடும் பாதிப்புக்குள்ளாயின. அதில் சுமார் 300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.