October 28, 2016 தண்டோரா குழு
தமிழக அரசு இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த 21 ஆம் தேதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு தமிழ் மாணவர்களை இலங்கை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இது மிகவும் அதிர்ச்சிக்குரியது, வேதனையளிக்கிறது. இந்த கொடூரச் செயல்புரிந்த இலங்கை காவல்துறையினரை தமாகா வன்மையாகக் கண்டிக்கிறது.
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்ற அந்த இரண்டு மாணவர்களையும் துப்பாக்கியால் சுட்டதை மறைப்பதற்கு அந்த மாணவர்கள் சாலை விபத்தில் இறந்ததாக இலங்கை அரசு கூறியது.அதன் பிறகு இலங்கை அரசு – அந்த மாணவர்கள் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால் தான் காவல்துறையினர் சுட்டனர் என தெரிவித்தது. இது ஏற்கெனவே அவர்கள் தெரிவித்ததற்கு முரணாக உள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூடு ஒரு விபத்து என்று இலங்கை அதிபர் கூறியிருந்தார். இதனை இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மேலும், இலங்கை மக்களுக்கு நிகராக அனைத்து உரிமைகளும் அங்கு வாழும் தமிழர்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும். ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு முழுமையாக அமல்படுத்திட இலங்கை அரசு முன்வர வேண்டும்.
இது போன்ற நியாயமான கோரிக்கைகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும்போது தற்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே மத்திய அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு, இச்செயலுக்குக் காரணமான இலங்கை காவல்துறையினர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்குள்ள தமிழர்கள் மீது இது போன்ற கண்மூடித்தனமான செயல்களில் இனிமேல் எவரும் ஈடுபடாமல் இருக்க வேண்டும் எனவும், இலங்கை மக்களுக்கு இணையான பாதுகாப்பு தமிழர்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டும்.
தமிழக அரசு இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.