October 28, 2016 தண்டோரா குழு
“தலாய் லாமா இந்தியாவின் சிறப்பு விருந்தினர். அவர் இங்கு இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்” என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஒரு பகுதி எனவும் சீனா கூறி வருகிறது. இது குறித்து இரண்டு நாடுகளுக்கு இடையே பிரச்னை உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா, அருணாசலப் சென்றார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் தலையிடக்கூடாது என்றும் கூறியது. இதனையடுத்து, அருணாசலப் பிரதேச முதல்வர் அழைப்பின் பேரில் அங்கு செல்லவிருந்த புத்தமத தலைவர் தலாய் லாமாவின் பயணம் குறித்து கேள்வி எழுந்தது. அவர் 2017 ம் வருடம் மார்ச் மாதம் அருணாசலப் பிரதேசம் செல்லும் வகையில் பயணத் திட்டம் உள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் கூறியது:
தலாய் லாமா, இந்தியாவின் சிறப்பு விருந்தினர். அவர் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்வதற்குக் கட்டுப்பாடு ஏதுமில்லை. தலாய் லாமா மதிப்பிற்குரிய மதத்தலைவர். அவரைப் பின்பற்றுவோர் ஏராளமானோர் அருணாசலப் பிரதேசத்தில் உள்ளனர். அவர்கள், தலாய் லாமாவிடம் ஆசி பெற விரும்புகின்றனர். முன்பு ஒரு முறையும் தலாய்லாமா அங்கு சென்றுள்ளார். வரும் காலங்களிலும் அவர் செல்வதில் பிரச்னை இல்லை என்றார் விகாஸ் ஸ்வரூப்.
தலாய் லாமாவின் செய்தித் தொடர்பாளர் தென்சின் தாகியா விடுத்துள்ள அறிக்கை:
அருணாசலப் பிரதேச முதலமைச்சர் மற்றும் பொதுமக்களின் அழைப்பை தலாய்லாமா ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் நிச்சயம் மார்ச் மாதம் அங்கு செல்வார். சீனாவின் எதிர்ப்பு குறித்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.