October 28, 2016 தண்டோரா குழு
“பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவாது. பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என கேரள அரசின் வனங்கள் மற்றும் கால்நடை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கேரள கால்நடை துறை அமைச்சர் கே. ராஜு சட்டப் பேரவையில் பேசியதாவது:
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் வாத்துகளின் உடலுறுப்பு மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சோதனையில், அப்பகுதியில் சுமார் 1,500 வாத்துகளுக்கு “ஹெச்5 என்8” வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பறவைக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் வாத்துகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
“ஹெச்5 என்8” வைரஸ் மனிதர்களுக்குப் பரவாது என மருத்துவர்கள் மேற்கொண்ட. ஆய்வில் தெரியவந்துள்ளது ஆகவே, பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அச்சம் இல்லை. எனினும், சூழ்நிலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன், வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவர்கள் தலைமையிலான 20 நடவடிக்கை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பாதிப்புக்குள்ளான வாத்துகளின் உரிமையாளர்களுக்கு, விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும். இரண்டு மாதத்துக்கும் அதிகமான வயதுடைய வாத்துகளுக்கு தலா ரூ.200, அதற்குக் குறைவான வாத்துகளுக்குத் தலா ரூ.100 இழப்பீடு வழங்கப்படும்.
அதே போல், அழிக்கப்படும் அவற்றின் முட்டைகளுக்கு தலா ரூ.5 என்ற வகையில் இழப்பீடு அளிக்கப்படும் என்று கூறினார்.