November 1, 2016 தண்டோரா குழு
உக்ரைன் நாட்டில் ஐஃபோன்-7 வாங்குவதற்காக அந்நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞர் தனது பெயரை ‘ஐஃபோன்-7’ என மாற்றிக் கொண்டிருக்கிறார்!
உலகம் முழுவதும் ஐஃபோன்களை வாங்கும் மோகம் அதிகரித்துள்ளது. போட்டிபோட்டுக் கொண்டு எல்லோரும் வாங்குகிறார்கள். ஆரம்பம் முதல் ஒவ்வொருவரின் கனவுக் கைபேசியாக இருப்பது ஐஃபோன்தான்.
ஐஃபோன் வாங்குவதற்காகத் தனது சிறுநீரகத்தைக் கூட விற்பனை செய்த விநோத விநோத செய்தி வந்திருக்கிறது.
ஆனால், உக்ரைன் நாட்டைத் சேர்ந்த 20 வயது நபர் ஒருவர் ஐபோன்-7 வாங்குவதற்காக செய்த காரியம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கீவ் நகரில் உள்ள ஒரு கடையில் ஐஃபோன்-7 மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. அப்போது, “எங்களது கடையில் ஐபோன்-7 வாங்கும் முதல் 5 வாடிக்கையாளர்கள் தங்களது பெயர்களை ஐ போன் 7” என மாற்றிக்கொண்டால் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த ஐஃபோனின் விலை 760 பவுண்டு (£760). அதாவது உக்ரைன் நாட்டின் செலாவணியின்படி அது 23,499 HAT ஆகும். இந்திய மதிப்பில் ரூ. 61,307 ஆகும்.
இந்த அறிவிப்பைக் கேட்ட அலெக்சாந்தர் டுரின் என்ற அந்த நபர் சிறிதும் சிந்திக்காமல் தனது வைக்கப்பட்ட பெயரை “ஐ ஃபோன் சிம் 7” (iPhone Sim Seven) என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொண்டார். (சிம் என்றால் உக்ரைன் மொழியில் ஏழு என்று அர்த்தம்). இதையடுத்து, அறிவிப்பை வெளியிட்ட கடை உரிமையாளர் அவருக்கு இலவசமாக “ஐ ஃபோன்-7” கடந்த வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இது குறித்து அந்த இளைஞரின் சகோதரி, “என் சகோதரன் ஐஃபோன் வாங்குவதற்காக இப்படிச் செய்ததை என்னால் ஏற்கவும் முடியவில்லை. நம்பவும் முடியவில்லை” என்றார்.
ஆனால், அந்த இளைஞரோ, “ஐஃபோனுக்காக என் பெயரை மாற்றிக் கொண்டதில் மகிழ்ச்சிதான்! எனினும், திருமணம் ஆகி, குழந்தைகள் பிறந்த பின் சொந்தப் பெயரைத் திரும்பவைத்துக் கொள்வதற்கு முயற்சி செய்வேன்” என்றார்.