November 2, 2016 தண்டோரா குழு
மவுலிவாக்கத்தில், தனியார் கட்டுமான நிறுவனம் கட்டிய 11 மாடி கட்டடம், 2014-ம் ஆண்டு ஜூன்28ம் இடிந்து விழுந்தது.அதில், 61 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அதன் அருகில் யாரும் செல்லக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.
பாதுகாப்பு இல்லாத பகுதியாக 11 மாடி கட்டடம் இருந்த பகுதி அறிவிக்கப்பட்டது. அந்த வளாகத்தை சுற்றிலும் சீல் வைக்கப்பட்டது. இது குறித்த ஒரு வழக்கில், பாதுகாப்பற்ற நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த இன்னொரு 11 மாடி கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அருகில் இருந்த அடுக்குமாடி கட்டத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) கட்டடத்தை இடிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. கட்டடத்தை வெடி வைத்து தகர்க்க, திருப்பூரை சேர்ந்த, ‘மேக் லிங்க்’ நிறுவனத்தை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து கட்டடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.இதற்கான ஏற்பாடுகள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசுச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் விஜயராஜ் குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
அதையடுத்து, கட்டடத்தில் வெடிபொருட்களை வைத்து, ரிமோட் இயக்கத்தின் மூலம் வெடித்து தகர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு தளத்திலும் வெடிபொருள்களை வைத்து சீல் வைத்தனர். மொத்தமுள்ள 11 மாடிக் கட்டடத்தையும் இடித்துத் தகர்க்க 70 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும், நூறு மீட்டர் சுற்றளவில் யாரும் தங்கக் கூடாது என்று எச்சரித்த அதிகாரிகள் அங்கிருந்தோரைப் பாதுகாப்பாக அருகில் ஒரு திருமண மண்டபத்தில் தங்கி, உணவு, குடிநீர் அளித்தனர்.
உள்ளாட்சித்துறை, சி.எம்.டி.ஏ., காவல்துறை, தீயணைப்புப் படையினர், சுகாதாரத் துறை ஆம்புலன்ஸ், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் எனப்பல்வேறு தரப்பட்ட உயர் அதிகாரிகள் புதன்கிழமை காலை முதலே இப்பணியில் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்தனர்.
அப்பகுதி மக்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன., கட்டடம் இடிக்கப்படும்போது, விலங்குகளுக்குப் பாதிப்பு வராமல் இருக்க, அவை ப்ளூ கிராஸ் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன.
புதன்கிழமை பகல் 2 மணிக்கு வெடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், கட்டடத்தை இடிக்கும்போது, எவ்வித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பது முழு அளவில் உறுதி செய்ய அதிகாரிகள் முழு வீச்சில் இறங்கினர்.ஒவ்வொரு மாடிக்கும் தனித்தனியாக வெடிபொருட்களை சுவருக்குள் துளையிட்டுப் புதைத்து, சீல் வைத்ததுடன், அவற்றை இணைக்கும் வகையில் மின்கம்பிகளை ஒருங்கிணைக்கச் செய்தனர்.
கட்டடத்தை இடிக்கும்போது மின்சாரம் தாக்காமல் இருக்க அப்பகுதியில் பகல் 2 மணி முதல் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. மொகலிவாக்கம், குன்றத்தூர், போரூர் ஆகிய சுற்றுப் புறப் பகுதிகளில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.கட்டடத்தை வெடித்து இடிக்கும்போது, அதில் உள்ள கான்கிரீட் இடிபாடுகள் வெளியே தெறித்து, யாருக்கும் காயம் ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கட்டடம் உள்ளுக்குள்ளேயே வெடித்து இடிபடும் வகையில் உறுதி செய்யப்பட்டது. இறுதியாக மாலை 5 மணிக்கு வெடிக்கச் செய்வது என்று முழு வீச்சில் திட்டமிடப்பட்டது. இதனிடையில், மழை பெய்ய ஆரம்பித்தது. “மழை பெய்தாலும் வெடி வைத்து தகர்ப்பதில் பிரச்சினை ஏதுமில்லை” என அதிகாரிகள் கூறினர்.
சில சிறிய காரணங்களால் வெடிப்பது காலம் தாழ்ந்து போனது. மாலை 5 மணிக்குப்பதிலாக, கவுண்ட் டவுன் தொடங்கி, மாலை 6.55 மணிக்கு மூன்று இடங்களில் பொருத்தப்பட்டிருந்த ரிமோட் இயக்கப்பட்டு, ஐந்து விநாடிக்குள் 11 மாடிக் கட்டடமும் தரைமட்டமானது.