November 3, 2016 தண்டோரா குழு
பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி விழாக்கால திட்டத்திற்கு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. கடந்த வாரம் எஸ்பிஐ வங்கி பொதுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்தது. அதையடுத்து, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) நிர்வாக இயக்குநர் ரஜினீஷ் குமார், “விழாக்கால திட்டம், பெண்களுக்கான வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கு வட்டி விகிதம் 9.1 சதவீதமாகவும் மற்றவர்களுக்கு வீட்டுக்கடன் விகிதம் 9.15 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் கிடைப்பவர்களுக்கு மட்டுமே விழாக்கால திட்டம் பொருந்தும்.
இந்த வட்டி விகித குறைப்பின் மூலம் 50 லட்ச ரூபாய்க்கான கடன் தொகைக்கு மாதந்திர தவணைத் தொகையில் 542 ரூபாய் குறையும். கடந்த மார்ச் மாதம் இருந்து மாதாந்திர தவணைத் தொகை குறைந்து கொண்டே வருகிறது.
தற்போதைய வட்டிக் குறைப்பின் மூலம் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி ஆகிய வங்கிகளை விட குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடனை பாரத ஸ்டேட் வங்கிதான் வழங்குகிறது” என்று கூறினார்.
அகமதாபாதைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தேனா வங்கியும் கடனுக்கான வட்டி விகிதத்தை0.05 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது கடனுக்கான வட்டிவிகிதம் 9.40 சதவீதமாக இருக்கிறது.
அடுத்த ஒரு வருடத்திற்கு இதே வட்டி விகிதம் நீடிக்கும் என தேனா வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.