November 4, 2016 தண்டோரா குழு
தமிழ்நாட்டில் கை நாட்டு ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் புகார் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நக்மா, குஷ்பு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:
தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தியை மோடி அரசாங்கம் தடுத்தது. அவரை மூன்று முறை கைது செய்தனர். இது என்ன நாடா அல்லது காடா என்று கேட்கிறேன்.
ராகுல் காந்தி எந்த விளம்பரமும் இல்லாமல் கூட்டம் சேர்க்காமல் தனியாக ஆறுதல் கூறச் சென்றார். அவரைச் சிறை பிடிப்பதா? இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அவர் இந்த நாட்டின் பிரதமராகப் பதவியில் அமருவார். அவரைப் போய்க் கைது செய்வதா?
தமிழ்நாட்டில் கைநாட்டு ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அதே நேரத்தில் அவர் கைநாட்டு வைத்து ஆட்சி நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என பேசினார்.