November 5, 2016 தண்டோரா குழு
கடனை மீட்கும் வழிமுறைகளை வங்கிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கடன் மீட்பு குறித்து, புது தில்லியில் சனிக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
உள்நாட்டு முதலீடுகளே நாட்டின் பொருளாதாரத்தைத் தன்னிறைவாக்கும். ஆனால், அதில் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதே போல தனியார் முதலீடுகளை உயர்த்த, வங்கிகள் கடன்களைத் திரும்பப் பெற வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில் பொது முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கின்றன. எண்ணெய் விலை குறைந்தது, நம்முடைய சேமிப்பை அதிகப்படுத்த உதவியது.
அடுத்தபடியாக அந்நிய நேரடி முதலீடுகள் நம்முடைய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.வெளிநாட்டவர் முதலீடு செய்ய இந்தியா விரும்பத்தக்க நாடாகத் திகழ்கிறது.அதே நேரம் அந்நிய நேரடி முதலீட்டிலும் சில சவால்கள் இருக்கின்றன.
இந்திய தனியார் துறை, முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும். வங்கிகள், அவர்களுக்குக் கடன் அளிக்கத் தயாராகும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.வங்கிகளிலிருந்து கடன் பெற்றவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்வது ஆயிரக்கணக்கானோர் தங்களது தொகையை பயனுள்ள வழியில் பயன்படுத்துவதைத் தடுப்பதாகும்.
அதனால் கடனை மீட்கும் வழிமுறைகளை வங்கிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்” என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசினார்.