• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தின் கடமை: முக ஸ்டாலின்

November 5, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வன்முறை போன்ற சட்டவிரோதச் செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. அவற்றைத் தடுக்க வேண்டியது நிதியமைச்சரின் கடமை என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், கொலை, கொள்ளை, வன்முறை போன்ற சட்டவிரோதச் செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி நேரத்தில் கூட கண்ணகி நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மூவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் கஞ்சா வியாபாரம் தொடர்பான மோதல்கள் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இளைஞர்களிடையே வன்முறையும் சட்டவிரோத செயல்பாடுகளும் அதிகரித்து, அது கொலையில் முடிகிற நிலை ஒருபுறமிருக்க, மூத்த குடிமக்கள் மீதான தாக்குதல்களும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன.

வீடுகளில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்களை குறிவைத்து கொலை செய்வது, கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.சென்னை தியாகராய நகரில் சமீபத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணியான சாந்தி படுகொலை செய்யப்பட்டிருப்பதும், அந்தக் கொலை தொடர்பாக காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு சான்றாகும்.சாந்தியைத் தொடர்ந்து இன்னொரு பெண்மணியும் அதே பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் “தமிழகத்தில் 162 மூத்த குடிமக்கள் கொலை, 71 பேர் மீது கொலை முயற்சித் தாக்குதல்கள், 88 கொள்ளைகள், 192 நம்பிக்கை மோசடி குற்றங்கள் என்பன உள்ளிட்ட 1969 குற்றங்கள் மூத்த குடிமக்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது, மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம்- 2009 கொண்டு வரப்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சமே, மூத்த குடிமக்களின் உயிரையும், உடமைகளையும் காக்கும் பொறுப்பு மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாநகரங்களைப் பொறுத்தமட்டில் போலீஸ் கமிஷனரிடமும் இருக்கிறது என்பதுதான்.

இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூத்த குடிமக்கள் குறித்த பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்; அந்த காவல் நிலைய எல்லையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஒருவருடன் இணைந்து காவல் நிலைய அதிகாரிகள் தனியாக வசிக்கும் முதியோரை மாதத்தில் ஒருமுறையாவது சென்று சந்திக்க வேண்டும்.

மூத்த குடிமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மூத்த குடிமக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அடிக்கடி ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு “ஹெல்ப் லைன்” தொலைபேசி அமைக்கப்பட வேண்டும், இது குறித்து மாநில அளவில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் அவ்வப்போது அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்றைய அரசு சரியாகக் கடைப்பிடிக்காத காரணத்தால் மூத்த குடிமக்கள், குறிப்பாக வயதான பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி, பணம்-நகை ஆகியவை கொள்ளையடிக்கப்படுவதுடன் கொலையும் செய்யப்படுகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட மக்கீஸ் கார்டனைச் சேர்ந்த தனலட்சுமி என்ற 48 வயது பெண்மணி கொலை செய்யப்பட்டு, பாதி எரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரமாக சென்னை உருவாகி வருகிறது. அண்மை நாட்களில் நடந்து வரும் தொடர்ச்சியான கொலைகள், சென்னையில் வசிப்போரை அச்சமடைய வைத்துள்ளது.

முதல்வர் பூரண குணமாகியுள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நாளை அவரே தீர்மானிப்பார் என்றும் மருத்துவமனைகளின் தலைவர் பேட்டியளித்துள்ளார். இந்நிலையில், தலைநகரத்திலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் கடமை, முதல்வரிடம் இருந்த உள்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது.

மூத்த குடிமக்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் தொடர்ந்து கொலை செய்யப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களின் உயிர் அச்சத்தைப் போக்கும் வகையில் காவல்துறையின் பணிகளை முடுக்கிவிட வேண்டும். இந்தப் பணியை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க