November 7, 2016 தண்டோரா குழு
பெண்குழந்தையைப் பெற்றுவிட்டாயா.. சிசுவுக்குக் கள்ளிப்பால் கொடுத்துவிடு” என்று வக்ரம் பிடித்த மாமியார்கள்தான் நாட்டில் இருப்பார்கள் என்றில்லை.
நல்ல மாமியார்களும் உலகில் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா தேவி.
தனது மருமகள் குஷ்பு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால், அவளுக்கு ஹோண்டா சிடி காரைப் பரிசாக அளித்து எல்லோரையுமே திக்குமுக்காடச் செய்துவிட்டார்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கருவுறும்போது அவள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பிறக்க போகும் குழந்தைகுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவள் நினைத்து அதை வரவேற்க தயார் ஆவாள் ஒரு தாய்.
ஆனால், சில குடும்பங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று பரிசோதித்து விட்டு, பெண்ணாக இருந்தால் அதை கருவிலேயே கலைத்து விடுவார்கள். பெண் குழந்தை என்றால் அவள் குடும்பத்திற்கு பாரம். ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அதனை வரவேற்க கொண்டாட்டங்கள் ஆனால் பெண் என்றால் அலட்சியம். இதையே மையமாக கொண்டு திரைப்படங்கள் வெளிவந்தன.
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து, ஆணுக்கு இணையாக பெண்கள் பணிபுரியும் இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு பெண்ணை ஆணுக்கு சமமாக ஏற்றுக்கொள்ளாத நிலை இன்றும் உள்ளது.
சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கவேண்டும் என்பதற்காக பல பூஜைகள் செய்தாள் ஒரு தாய் ஆனால் பிறந்ததோ ஒரு அழகிய பெண் குழந்தை. தான் விரும்பியது கிடைக்காத காரணத்தால் அந்த குழந்தையைக் கொடூரமாக கொலை செய்தாள்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்படி, மருமகள் மீது அளவற்ற அன்பைக் காட்டி, கார் பரிசளித்த அந்த மாமியார் உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர்.
பிரேமா தேவியின் மகன் அம்மாவட்டத்தின் அரசு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். மருமகள் குஷ்புவுக்கு அழகான பெண் குழந்தை சில தினங்களுக்கு முன் பிறந்தது.
குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் வகையில் அவர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் பங்கேற்ற அனைவரின் முன்னாலும், தீபாவளிப் பரிசாக ஹோண்டா சிடி காரைப் பரிசாக அளித்தார். மகிழ்ச்சியில் கண்ணீர் பொங்க குஷ்பு, “இப்படிப் பட்ட மாமியார் கிடைப்பதற்கு என்ன தவம் செய்தேனோ…” என்று நெகழ்ந்தார்.
அப்போது, மாமியார் பிரேமா தேவி, ”ஒவ்வொரு மாமியாரும் வீட்டிற்கு வரும் மருமகளை தன் மகளைப் போலவே நடத்த வேண்டும். அப்போது தான் பெண் சிசுக் கொலை முடிவுக்கு வரும்” என்று அந்த பெருமைக்குரிய பிரேமாதேவி தெரிவித்தார்.
குடும்பத்தில் மகன்களை விட மகள்களே சிறந்தவர்கள் என்று உறுதிபடக் கூறுகிறார் பிரேமா தேவி.