November 10, 2016 தண்டோரா குழு
விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முற்படுவது ஏன் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பங்கேற்க வகை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், பிராணிகள் நல அமைப்பான “பீட்டா’ ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் அறிவிக்கைக்குத் தடை விதித்தது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிங்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் சேகர் நாஃப்தே ஆஜராகி, “ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான உத்தரவில் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளன. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான வாதங்களைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா ஆஜாராகி, காட்சிப்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் காளையைச் சேர்த்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2011, ஜூலை 11-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.
பின்னர், அப்பட்டியலில் உள்ள காளையை நீக்காமல் “ஜல்லிக்கட்டு, ரேக்ளா விளையாட்டில் அந்த விலங்குகள் துன்புறுத்தப்படாமல் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று 2016, ஜனவரி 7-இல் இரண்டாவது அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது” என்றார்.
இதையடுத்து நீதிபதி தீபக் மிஸ்ரா, “எவ்வித வதைக்கும் ஆளாகக் கூடாது என்ற நோக்கத்துடன்தான் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளை 2011-இல் மத்திய அரசு சேர்த்தது. பின்னர், அதே காளைகளை ஜல்லிக்கட்டு போன்ற காட்சிப்படுத்தப்படும் போட்டிகளில் மறைமுகமாக அனுமதிப்பது முரணாகாதா?
காளை இல்லாமல் பொழுதுபோக்கு நிகழ்வை நடத்த இயலாதா? 16-ஆம் நூற்றாண்டில் அடிமைகள், எதிர்த்துப் பேச முடியாத நிலையில் இருந்ததைப் போல காளைகள் தற்போது உள்ளன. ஜல்லிக்கட்டுக்குச் சாதகமாக விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முற்படுவது ஏன்?
அவ்வாறு செய்தால் அது பரிவு காட்ட வேண்டிய விலங்குகளுக்கு எதிரான செயலாக அமையாதா? இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானதாக அமையாதா? காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, குறுகிய சாலையில் பெரிய வாகனத்தை இயக்க அனுமதி அளிப்பது போல உள்ளது.
இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு முரண்பாடுகள் நிறைந்தவையாக உள்ளன” என்றார்.