November 10, 2016 தண்டோரா குழு
சென்ற ஆண்டு வெள்ளத்தில் சிக்கிய சென்னையில் இந்த ஆண்டு ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலங்கி நிற்கின்றனர் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான நிலை உருவாகி
இருக்கிறது. மாநகரின் பல பகுதிகளில் காலையில் குடிநீர் கிடைப்பதில்லை. வட சென்னையில் கிடைக்கும் குடிநீரும் பல இடங்களில் கழிவு நீர் கலந்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கொளத்தூர் தொகுதி மக்களும் இது போன்ற குற்றச்சாட்டுகளை சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் தெரிவித்து வருகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகள், மொத்த நுகர்வோர், தொழிற்சாலைகள் என மொத்தம் 67 லட்ச த்துக்கும் மேற்பட்டோருக்கு சென்னைப் பெருநகர குடிநீர் வாரியம் குடிநீர் வழங்கி வருகிறது.
திமுக ஆட்சியின்போது மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டது. நான் முதன் முதலில் சென்னை மாநகர மேயராகப் பொறுப்பேற்றபோதுதான், ஆந்திர மாநில அரசை வலியுறுத்தி கிருஷ்ணா நீர் பெறப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கடந்த ஆறு வருடத்தில் சென்னை மாநகரத்தின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மக்களுக்கு லாரிகளில் குடிநீரை வழங்கிவிட்டாலே தங்கள் பணி நிறைவு பெற்று விட்டதாக எண்ணும் அதிமுக அரசு, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் குறித்து வெற்று “110வது அறிக்கை அறிவிப்புகளை” வெளியிட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் இன்றைக்கு சென்னை மாநகர மக்கள் வரலாறு காணாத வகையில் குடிநீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர் மட்டம் அதல பாதாளத்திற்குக் குறைந்து தற்போது, ஒரு டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே ஏரிகளில் கையிருப்பு இருக்கும் மிக மோசமான நிலை ஏற்பட்டு விட்டது.
சென்னை மாநகருக்கு வர வேண்டிய 12 ஆயிரம் கன அடி கிருஷ்ணா நீரை ஆந்திர மாநிலம் திறந்து விட வேண்டும். இந்த ஒப்பந்தப்படி சென்னை மாநகரத்திற்கு ஆந்திர மாநிலம் முழு அளவு தண்ணீரைத் திறந்து விடுவதில்லை. இதற்கிடையில் கடந்த அக்டோபர் முதல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீரைத் திறந்து விடுவதாக அறிவித்தது.
ஆனால், அப்படி திறந்து விட்ட தண்ணீரும் வழியில் ஆந்திர மாநில விவசாயிகளால் உறிஞ்சி இழுக்கப்பட்டதால், இதுவரை சென்னை மாநகரத்திற்கு 336 மில்லியன் கன அடி கிருஷ்ணா நீர் மட்டுமே கிடைத்துள்ளது. அதையும் கூட இப்போது ஆந்திர மாநில அரசு நிறுத்தி விட்டது. இது பற்றி தமிழக அரசின் அதிகாரிகளோ, துறை அமைச்சரோ கவலைப்படவில்லை. ஆந்திர மாநில அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சென்னைக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சென்னை மாநகர மக்கள் குடிநீருக்குக் கடுமையாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் வேலுமணி தஞ்சாவூர் தேர்தல் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு கொண்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட அதிமுக அமைச்சருக்கோ, அரசுக்கோ இப்பிரச்னையின் முக்கியத்துவம் புரியவில்லை.
குறைந்த பட்சம், ஏற்கெனவே அறிவித்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி, குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளைத் தூர் வாரி, மழை காலங்களில் கிடைக்கும் உபரி நீரைச் சேமித்து வைக்க தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் சென்னை மாநகர மக்கள் இப்படியொரு குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.
ஆகவே, அமைச்சர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்தாலும், தலைமைச் செயலாளர், நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அரசுச் செயலாளர், சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆந்திர மாநிலத்திலிருந்து 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை பெற வேண்டும். சென்னை மாநகர குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திலிருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்ற ஆண்டு செயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட வெள்ளத்தால் வடித்த விழிநீர் காய்வதற்குள், இந்த ஆண்டு ஆட்சியாளரின் அலட்சியத்தால் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று சென்னை மாநகர மக்கள் சிந்தை கலங்கியுள்ளனர்.
“நீரின்றி அமையாது உலகு” என்று அய்யன் திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டியது முதல் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.